Monday, February 4, 2013

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் விதிமுறை மீறல் தொடர்கிறது...!



மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டுக்கான பாடங்களை இப்போதே நடத்த துவங்கியுள்ளனர். விதிமுறைகளை மீறும் தனியார் பள்ளிகளை கண்டு கொள்ளாத அரசின் போக்கு, பெற்றோரையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வை மட்டுமே, மிக முக்கியமாக கொண்டு செயல்படுகிறது. ஏனெனில், அதில் கிடைக்கும் அதிகபட்ச தேர்ச்சியையும், மதிப்பெண்களையும் விளம்பரப்படுத்தியே,
அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. இதனால், பொதுத் தேர்வில் ஒவ்வொரு மாணவனையும், அதிகபட்ச மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்ற முனைப்புடனே, பெரும்பாலான தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியும், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையையும் மட்டுமே, லட்சியமாக கொண்டு இயங்குகின்றன. இதில், அதிக மதிப்பெண் எடுக்க இயலாத சராசரி மாணவர்களுக்கு, "கல்தா' கொடுக்கவும் சில பள்ளிகள் தயங்குவது இல்லை.

இதற்காக, அரசு விதிமுறைகளைகாற்றில் பறக்கவிடுவதோடு, பலவித குறுக்கு வழிகளையும் நாடுகின்றன. ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களை, ஒரு சில மாதங்களில் முடித்துவிட்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடங்கள் நடத்துவதை, பல மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கமாக கொண்டுள்ளன.ஒன்றரை ஆண்டுக்கு, ஒரே பாடத்தை திரும்ப திரும்ப நடத்தியும், அதில், தொடர்ந்து மாதிரி தேர்வு நடத்தியும், மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்க முயற்சிக்கின்றன.பொங்கல் விடுமுறைக்குப் பின், பெரும்பாலான பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்பு பாடமும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடமும் நடத்த துவங்கிவிட்டனர். இதனால், கல்வியாண்டின் நடுவில், அந்த பாடப் புத்தகங்களை வாங்கிவர வற்புறுத்துகின்றன. வேறு எங்கும் பாடப் புத்தகங்கள் கிடைக்காததால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அவதிக்கு உள்ளாகின்றனர்.
தேர்வின் போது மட்டும், ஒன்பதாம் வகுப்பு பாடங்களை படிக்க வேண்டியிருக்கும் என்பதால், கூடுதல் குழப்பம் மற்றும் பணிச்சுமையால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்."ஆண்டுக்காண்டு அரசு விதிகளை காற்றில் பறக்கவிடும் தனியார் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்காதது, கல்வி வியாபாரத்தை ஊக்குவிப்பதாகவே அமைகிறது' என, கல்வி யாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதும், தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்டுவதுமே, வெற்றி என்ற மாயயை தனியார் பள்ளிகள் மக்களிடையே பரப்பிவிட்டன. அதுபோன்ற பள்ளிகளுக்கே, பொதுமக்களும் சேர்க்கைக்கு கட்டணத்தை பற்றி கவலைப்படாமல் படையெடுப்பதால், அனைத்து பள்ளிகளும் அதையே பின்பற்ற துவங்கிவிட்டன.

கல்வியின் மூலம் அனுபவத்தை கற்றுக் கொள்வதற்கு பதில், மனப்பாடம் செய்ய வைக்கும், இயந்திரமாக குழந்தைகளை மாற்றிவிடுகின்றனர்.இதனால், கல்வியாண்டின் நடுவில், புத்தகம் கிடைக்காமல் தவிப்பது, விதிமுறைகளின்படி செயல்படும் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள், இவர்களோடு போட்டி போட முடியாமல் தவிப்பது போன்ற பாதிப்புகள் உருவாகின்றன.இவற்றையெல்லாம் தெரிந்தும்,ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளின் விதிமீறலை அனுமதித்து வரும் அரசின் போக்கு, கல்வியை வியாபாரமயமாக்குவதற்கு உதவி செய்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment